திபெத் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழப்பு,

07.01.2025 07:56:11

சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 62 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை தாக்கிய நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க‍ புவியியல் ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

எனினும் நிலநடுக்கம் 6.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது.

எவ்வாறெனினும், இதன் தாக்கம் அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தை அடுத்து சமூக ஊடக பதிவுகள் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களையும், மீட்பு பணிகளையும் வெளிக்காட்டுகின்றன.