கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.1,338 கோடி அபராதத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

19.01.2023 22:38:41

கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.1,338 கோடி அபராதத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது

பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த 4-ந்தேதி விசாரித்தது.

இதில் அபராத தொகையில் 10 சதவீதத்தை பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தது. இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்திய தொழில் போட்டி ஆணையத்தால் கூகுள் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.1337.76 கோடி அபராதத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும் இந்த விவகாரத்தை மார்ச் 31-ந்தேதிக்குள் விசாரிக்க, தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.