சுகாதார ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பு யாழில் நோயாளிகள் அந்தரிப்பு!

08.03.2023 15:38:16

 நாடு தழுவியரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் இன்று நடத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வரிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டுவரும் நோயாளர்களை சிகிச்சைப் பிரிவுகளுக்கு கொண்டு செல்வதற்குகூட வைத்தியசாலை ஊழியர்கள் இன்மையால் பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.