தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் விஜய்!

25.09.2025 08:08:21

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும்,  தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது பா.ஜ.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளை தனது அரசியல் எதிரிகளாக சுட்டிக்காட்டி உரையாற்றினார். சமீபத்தில் மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டிலும் அவர் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக, “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில்  சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வில் நடிகர் விஜய் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் . நடிகர் விஜயை  Instagram இல் 1.46 கோடிபேரும் Facebook க்கில்  77 லட்சம் பேரும் X தளத்தில் 55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அந்தவகையில்  சராசரியாக  93 லட்சம் பேர் விஜயை பின்தொடர்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. 

அதே சமயம்   தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மொத்தமாக  30 லட்சம் பேரும்  எடப்பாடி பழனிசாமியை   2.95 லட்சம் பேரும் , அண்ணாமலையை  10.25 லட்சம் பேரும் , உதயநிதி ஸ்டாலினை  மொத்தம் 16.25 லட்சம் பேரும் பின்தொடர்கவதாகத் தெரிய வந்துள்ளது. 

எவ்வாறு  இருப்பினும்சமூகவலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது அரசியல் ஆதரவு அல்லது வாக்குகள் என்பதைக் குறிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு Instagram-இல் 9.75 கோடி பின்தொடர்பவர்கள் இருக்க, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமான 27.3 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதுபோல, விஜய்க்கும் அவரது திரை உலகப் புகழ் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம் உள்ளதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.