பாலியல் புகார் சுமத்திய சீன வீராங்கனை மாயமானதாக எழுந்த சர்ச்சை
சீனாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், தாம் பாதுகாப்பாக இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் சீனாவைச் சேர்ந்த பெங் சூவாய்.
இவர் அண்மையில் சீனாவின் முன்னாள் பிரதமரும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சமூக வலைத்தளம் மூலம் இந்த குற்றச் சாட்டை முன்வைத்த நாள் முதல் பெங் சூவாய் காணாமல் போனார். அவரின் பாதுகாப்பு குறித்து உண்மையான ஆதாரங்களை அளிக்குமாறு சீனாவை ஐநா வலியுறுத்தியது. இந்த நிலையில் பீஜிங்கில் நடைபெற்ற டீனேஜர் டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பெங் சூவாய் கலந்து கொண்டதாக கூறி, சீன அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதவிர பெங் சூவாய் சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார்.
பெய்ஜிங்கில் உள்ள தனது சொந்த வீட்டில் முழு பாதுகாப்புடன் நலமாக இருப்பதாக கூறியுள்ளார். பெங் சூவாய் காணாமல் போனதன் பின்னணியில் அதிபர் ஜிங்பிங் தலைமையிலான அரசுக்கு பங்கு இருக்கலாம் என்று சந்தேகம் நிலவியதால் இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சீனாவை நோக்கி கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் இந்த வீடியோக்கள் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.