
அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்?
ரணில் ஒரு “வலிய சீவன்” என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஒர் அமீபாவைப் போல எல்லா நெருக்கடிகளுக்குள்ளும் தன்னை சுதாகரித்துக் கொண்டு,சுழித்துக் கொண்டு,வளைந்து நெளிந்து விட்டுக்கொடுத்து,தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வல்லமை அவருக்கு உண்டு என்ற பொருளில் அவ்வாறு கூறியிருந்தேன்.ஆனால் அண்மையில் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் அவரைப் பிணை எடுப்பதற்காக சுட்டிக்காட்டிய நோய்களின் அடிப்படையில் சிந்தித்தால், அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.அவருடைய சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கும் அத்தனை நோய்களும் அவரைப் பாதிக்குமாக இருந்தால் அவர் ஓர் ஆரோக்கியமான ஆளாக இருக்க முடியாது. இதை அமைச்சர் லால் கந்த சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தடுப்புக்காவல் நாட்களில் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களின்படி,கைது செய்யப்பட்டதன் மூலம் ரணிலுக்கு இருந்த நோய்கள் வெளித்தெரிய வந்தன என்றும் அதன் மூலம் அவர் அந்த நோய்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் எடுத்துக் கொண்டால்,அந்த மருத்துவர் கூறுவதுபோல கைது செய்யப்பட்டதால் அவருக்கு நன்மை கிடைத்திருக்கிறதா?
வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது அவர் கையில் வைத்திருந்த புத்தகம் போரிஸ் ஜெல்சின் எழுதியது. Unleashed-கட்டவிழ்த்து விடப்படுதல் என்பது அதன் பெயர். அனுர எதைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்? அந்த மருத்துவர் கூறுவதுபோல நோய்கள் நீங்கப்பெற்று ரணில் புத்திளமையோடு மீண்டும் அரசியலுக்கு வருவாரா ? அல்லது லால் கந்த கூறுவதுபோல ரணில் ஒரு நோயாளியாக அரசியலில் இருந்து ஒதுங்குவாரா?
அவர் ஒரு வலிய சீவன்.இப்பொழுது சீண்டப்பட்டிருக்கிறார். காயப்பட்ட பாம்பு. எனவே பழிவாங்கும் உணர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் எதிர்காலத்தில் இயலாத வயதிலும் அவர் அரசியலில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது அவமானத்தோடும் தோல்வியோடும் அவப்பெயரோடும் அவர் அரசியலில் இருந்து ஒதுங்க நேரிடலாம்.அவரைப் போலவே தந்திரமும் சூழ்ச்சிகளும் நிறைந்த அவருடைய மாமன் ஜெயவர்த்தன இறந்த பொழுது அவருக்காக நாடு பெரிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
நவீன சிங்கள பௌத்த அரசியலில் ரணில் ஒரு வித்தியாசமான தலைவர். அவர் என்றைக்குமே சிங்கள பௌத்த ஆடைகளோடு காணப்பட்டதில்லை. மேற்கத்திய ஆடைகளோடுதான் காணப்பட்டார்.அவர் என்றைக்குமே சிங்கள பௌத்த தீவிரவாதத்திற்கு தலைமை தாங்க முற்பட்டதில்லை. லிபரல் முகமூடி அணிந்த ஒரு இனவாதியாகவே என்றென்றும் இருந்தார்.அவருடைய லிபரல் முகமூடி தற்செயலானது அல்ல. அவருடைய மேற்கத்தியப் பாரம்பரியத்தினடியாகக் கிடைத்தது. அவர் மேற்கத்திய நாடுகளுக்கு அதிகம் இசைவான ஒரு தலைவர்.எனவே அவர் அந்த முகமூடியை அணிந்தால்தான் தனது வாக்காளர்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணலாம்.
இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் என்று பார்த்தால் முக்கியமான மூன்று முயற்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில்தான் முன்னெடுக்கப்பட்டன.முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை. இரண்டாவது ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை.மூன்றாவது நிலைமாறு கால நீதியின் கீழான முன்னெடுப்புகள்.
இந்த மூன்றில் இரண்டு முயற்சிகளில் ரணில்தான் சிங்கள பௌத்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தியவர். எனவே தொகுத்துப் பார்த்தால் இலங்கைத் தீவில் சமாதான முயற்சிகளில் அதிகமாக ஈடுபட்ட ஒரு சிங்களத் தலைவராக அவரைக் கருத முடியுமா?
ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் ரணிலை ஒரு நரி என்று அழைத்திருந்தார். தனது மாமனைப் போலவே ரணிலும் ஒரு தந்திரசாலிதான். ஆனால் அவருடைய மாமன் அளவுக்கு அரசியலில் அவர் அதிர்ஷ்டசாலி அல்ல.அவருடைய கெட்டித்தனங்களையும் தந்திரங்களையும் சிங்கள மக்கள் அங்கீகரிக்கவில்லை.சிங்கள மக்கள் அவரைப் போன்ற மேற்கத்திய பாரம்பரியத்தின் பிரதிநிதியாக தோன்றுகின்ற ஆனால் முகமூடி அணிந்த ஓர் இனவாதியை விடவும் வெளிப்படையாக தெரியும் இனவாதிகளைத்தான் அங்கீகரித்தார்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். இதனால் ரணில் விக்கிரமசிங்க சிங்கள பௌத்த அரசியலில் அதிர்ஷ்டம் அதிர்ஷ்டமில்லாத ஒரு தலைவர்தான்.விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்தாலும் அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் தான்.
அவர் மட்டுமல்ல அவரை அங்கீகரிக்க மறுத்த சிங்கள மக்களும் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்தான்.ஏனென்றால் அவரைப் போன்ற ஒரு தந்திரசாலிதான் சிங்கள மக்களைப் பேரரசுகளின் இழு விசைகளுக்குள் இருந்து காப்பாற்றக் கூடியவர்.ஏனென்றால் எல்லாப் பேரரசுகளையும் சமதூரத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு தலைவராக ரணில் மட்டுமே காணப்படுகிறார்.இந்தத் தகுதி காரணமாகவே அவர் தமிழ் மக்களை அனைத்துலக அரங்கில் தோற்கடிக்கும் வாய்ப்புகளை அதிகமாக கொண்டிருந்தவர்.மேற்கு மைய சமாதான முயற்சிகளில் ரணில் எப்பொழுதும் மேற்குடன் நிற்பார். மேற்கும் ஐநாவும் ரணிலுடன் நிற்கும். இதன் இறுதி விளைவாக தமிழ் மக்கள் அனேகமாக சமாதானம் என்ற பெயரில் ஒரு “தருமர் பொறிக்குள்” அகப்பட நேரிடும். அப்படியொரு தருமர் பொறிக்குள் இருந்து தப்புவதற்காகத் தான் விடுதலைப்புலிகள் இயக்கம் 2005 இல் நடந்த தேர்தலில் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிப்பதைத் தடுத்தது.அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்றும் அழைத்தார்.
அவர் ஒரு நரியாக இருப்பது தமிழ் நோக்கு நிலையில் ஆபத்தானது. பாதகமானது.ஆனால் சிங்கள நோக்கு நிலையில்,அது சிங்கள பௌத்த அரசியலுக்கு அதிகம் வாய்ப்பானது. பாதுகாப்பானது. இலங்கை ஒரு குட்டித் தீவு. இந்தியப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்துக்குள் அமைந்திருக்கும் ஒரு குட்டித் தீவு.அதேசமயம் பேரரசுகளின் வணிக வழிகளில் அமைந்திருப்பது என்பதனாலும் மற்றொரு பிராந்திய பேரரசு ஆகிய சீனாவின் உலகளாவிய விரிவாக்க வியூகத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு விட்டதனாலும் உலகில் உள்ள எல்லாப் பேரரசுகளினதும் இழுவிசைகளுக்குள் இலங்கை சிக்கியிருக்கிறது.
ஒரு குட்டித் தீவு என்ற அடிப்படையில் பேரரசுகளோடு புஜ பலத்தால் மோத முடியாத ஒரு நாடு.ஆனால் புத்தியால் மோதலாம்.புத்தியால் தந்திரத்தால் சமாளிக்கலாம்.சிங்கள மக்கள் தங்களைச் சிங்கத்தின் வாரிசுகளாக கருதலாம். ஆனால் நடைமுறையில் அவர்கள் சிங்கங்கள் அல்ல. ராஜதந்திரக் காட்டில் மிகச் சிறிய பிராணிகள் அவர்கள்.உருவத்தில் சிறுத்த நரி தந்திரம் தான் செய்யலாம். எதிரியையும் எதிரியையும் மோத விட்டுத் தன்னைத் தற்காத்துக் கொள்ளலாம். அதைத்தான் ரணிலின் மாமனார் ஜெயவர்த்தனா ஈழப் போரில் செய்தார்.
மாமனைப் போலவே மருமகனும் ஒரு தந்திரசாலி. புஜ பலத்தை விடவும் புத்தி பலத்தை நம்பிய ஒரு தலைவர். பேரரசுகளின் ஆபத்தான இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு சிறிய தீவின் தலைவர்கள் அப்படித்தான் இருக்கலாம். அவர்கள் நெஞ்சை நிமித்திக்கொண்டு முன் சென்றால் பேரரசுகள் ஒன்றில் அடித்து முறித்து விடும். அல்லது விழுங்கிவிடும். இது ரணிலுக்குத் தெரியும். எல்லாச் சிங்களத் தலைவர்களுக்கும் தெரியும்.ஆனால் இந்த ஆபத்தை கையாள்வதில் அவர்களிடம் வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் இருந்தன. இந்த விடயத்தில் ரணில் ஒரு தந்திரசாலியாக இருந்தார். தந்திரங்களின் மூலம் அதாவது புத்தி பலத்தால்தான் பேரரசுகளை வெட்டியோடலாம் என்பது அவருடைய அணுகுமுறை.
அவர் அவ்வாறு எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்து அணுகக்கூடிய கெட்டித்தனமும் தந்திரமும் மிக்கவர் என்பதனால்தான், அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரே சந்தர்ப்பத்தில்,நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட டளஸ் அழகப்பெருமாவை ஆதரிக்குமாறு இந்தியா தமிழ்க் கட்சிகளிடம் கூறியதா?
மேற்கு நாடுகளுக்கும் இது தெரியும். அவரைக் கண்டபடி கையாள முடியாது. ஆனால் மேற்கு நாடுகளுக்கு ரணிலின் விடயத்தில் உள்ள ஆறுதலான விடயம் என்னவென்றால் அவர் என்றைக்குமே நாட்டை மேற்குக்கு எதிரான திசையில் செலுத்த மாட்டார் என்பதுதான். ஏனென்றால் அவர் அவர்களுடைய குட்டையில் ஊறிய ஒரு மட்டை.
எனவே ரணில் தந்திரசாலியாக இருந்தது சிங்கள மக்ககமானது ளுக்கு சாதபாதுகாப்பானது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு பேரரசுகளின் மத்தியில் தப்பிப் பிழைப்பது என்றால் அதன் தலைவர் நரியாகத்தான் இருக்க முடியும்.சிங்கமாக அல்ல.
ஆனால் சிங்களக் கூட்டு உளவியலானது சிங்கங்களைத்தான் தேடியது. அதனால் ரணில் சிங்கள பௌத்த அரசியலில் அதிஷ்டம் குறைந்த ஒருவராகவே காணப்படுகிறார். தேர்தல்மூலம் ஒரு ஜனாதிபதியாக வரும் கனவு அவரை பொறுத்தவரை இதுவரை பலிக்கவே இல்லை.அதன் விளைவாக சொந்தக் கட்சிக்குள்ளும் உடைவு.
இவ்வாறு ஒரு பலவீனமான இலக்காக அவர் இருந்தபடியால்தான் என்பிபி அவரைத் தூக்கியது. ஆனால் இப்பொழுது அவரை நோக்கி ஒரு திரட்சி ஏற்பட்டு இருக்கிறது. அவரைக் கைது செய்ததன்மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரளக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால் மக்கள் எழுச்சிகளின் பின்னணியில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி தலைமை தாங்கவல்ல தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் என்பிபி வெற்றி பெற்றது.லால் கந்த அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.அந்த வெற்றிடத்தில்தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பு ரணிலுக்குக் கிடைத்தது.அந்த வெற்றிடம் இப்பொழுதும் உண்டு. ரணிலை முன்வைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சிங்கள மேட்டுக்குடி என்பன ஒரு பலமான திரட்சியை உருவாக்கினால் அது எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சவாலாக மாறலாம். ஆனால் அந்த திரட்சிக்கு தலைமை தாங்கரணிலால் முடியுமா?அனுர கட்டவிழ்த்து விட்டிருப்பது எதனை?