பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி - ஓபிஎஸ் பலப்பரீட்சை
வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி, ஓபிஎஸ் பலப்பரீட்சையை தொடங்கியுள்ளனர். அதிமுகவில் இரு அணிகளும் ஆதரவாளர்களை திரட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா விடுதலையான பின்னர் கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளார்.
பிரிந்துள்ள அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். விரைவில் அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார்.
முன்னதாக அதிமுக பொது செயலாளர் என்று பெயரிட்டு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு அதிமுக தரப்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பெயரை பயன்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. இதை சட்டரீதியாக அணுகி அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் சசிகலா தொடர்பாக நிருபர்கள் எடப்பாடியிடம் கேள்வி கேட்ட போது, அநாகரீகமான ஒரு கருத்தை தெரிவித்தார். மேலும் ஒரு போதும் அவரை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுப்பது போல, ஓபிஎஸ் நேற்று பேட்டியளித்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.