ஷைத்தான்’- தமிழில் ரீமேக் ஆகிறதா?
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.
தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லர் படமான ஷைத்தான் நேற்று ரிலீஸ் ஆனது. வில்லத்தனத்தில் மாதவனின் நடிப்பு பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்துக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும் 15 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தபடத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஜோதிகாவே நடிக்க உள்ளதாகவும் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.