அக்னிபாத் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

16.01.2023 22:09:12

ராணுவத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வழிவகை செய்யும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள். ராணுவத்தில் இருந்து வெளியேறும்போது ரூ.11 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் பயிற்சியை தொடங்க உள்ளனர். இந்நிலையில், அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் மோடி கூறுகையில், நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும். இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என தெரிவித்தார்.