16,000 ஆசிரியர்கள் நியமனம்

23.07.2024 07:58:36

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
 
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில,

பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பல்கலைக்கழக கட்டமைப்புக்கும் நிர்மாணத் துறைக்கும் மிகவும் முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.

மேலும், கல்வித்துறையில் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதன் கீழ், ஆசிரியர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்டும். அதன் மூலம் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியும். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பிரகாரம், எதிர்வரும் புதன்கிழமைக்குள், உரிய உத்தரவுக் கடிதங்கள் அமைச்சுக்கு கிடைத்த பின்னர், மாகாண அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அத்துடன், இந்தக் காலப்பகுதியில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சுமார் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க ஏற்பாடு செய்தோம். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.