தபால் வாக்களிப்பு ஆவணங்கள் இன்று அனுப்பப்படும்!
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டு ஆவணங்கள் இன்று தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்குச்சீட்டு ஆவணங்களை அச்சிடும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல் ரத்நாயக்க கடந்த 02 நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். |
ஜனாதிபதித் தேர்தலில், தபால் மூல வாக்களிப்பை அடுத்த மாதம் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள் அடுத்த மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்கப்பதற்கும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வருடம், 712,319 அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். இதேவேளை, தமது திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள தபால் மூல வாக்குச் சீட்டுகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். |