
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்.
நேபாளத்தில் முடிவடைந்த ஒரு வார கால கொடிய வன்முறையைத் தொடர்ந்து, அந் நாட்டு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் நாடாளுமன்றத்தைக் கலைத்து மார்ச் 5 ஆம் திகதி புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய “ஜெனரல் இசட்” தலைமையிலான ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி இடைக்கால அடிப்படையில் நாட்டை வழிநடத்துவார் என்று அவர் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் பவுடலின் அலுவலகத்திலிருந்து தேர்தல் தொடர்பான அறிக்கை வந்தது.
அந்த அறிக்கையின்படி, ஜனாதிபதி “பிரதிநிதிகள் சபையைக் கலைத்து” அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக நிர்ணயித்துள்ளார் – என்று தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான எழுச்சியின் பின்னர் ஜனாதிபதி பாவ்டேல், இராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் போராட்டத் தலைவர்கள் இடையே இரண்டு நாட்கள் நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இடைக்கால அடிப்படையில் நாட்டை வழிநடத்த கார்க்கி நியமிக்கப்பட்டார்.
இந்த வன்முறை போராட்டங்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2008 ஆம் ஆண்டு முடியாட்சி ஒழிக்கப்பட்டதிலிருந்து நேபாளம் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது.
அதேநேரத்தில், வேலையின்மை மில்லியன் கணக்கான இளைஞர்களை மத்திய கிழக்கு, தென் கொரியா மற்றும் மலேசியா போன்ற பிற நாடுகளில் வேலை தேடத் தூண்டியுள்ளது.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் 30 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் நேற்று முதல் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை முதல் அமுலில் உள்ள சில தடை உத்தரவுகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் தலைநகர் காத்மாண்டுவின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன, வாகனங்கள் மீண்டும் தெருக்களுக்குத் திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.