
நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர்.
-
முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
-
பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர்.
பொலிஸார் தங்கள் இடங்களை விட்டு விலகியதால், கைதிகள் எளிதில் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கலவரங்களின் பின்னணியில், முன்னாள் துணைப் பிரதமரும் ராஷ்டிரிய சுவதந்திரக் கட்சி தலைவருமான ரபி லாமிச்சானே விடுவிக்கப்பட்டார். அவர் விடுதலையானதும் மக்களிடம் உரையாற்றி, ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.
இதன் பின்னர், கடும் அழுத்தத்திற்கு இடமான நேபாளப் பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி ராஜினாமா செய்தார்.
மேலும், லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் நேபாள அரசியல் நிலைமை மேலும் அலைக்கழிக்கப்படுகிறது.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்
-
ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும்.
-
கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் தர வேண்டும்.
-
அனைத்து கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க வேண்டும்.
-
அரசியல் தலைவர்களுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க வேண்டும்.
தப்பியோடிய கைதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.