ஒத்தி வைக்கப்பட்டது முதல்வர் தெரிவு!

19.01.2023 08:00:00

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு இன்று காலை 10 மணிக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையில் சபையை கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்டின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்து ஈ.பி.டி.பியை சேர்ந்த எம்.ரெமீடியஸ் சபையையிலிருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர். இதனைத் தொடர்ந்து தெரிவைக் கொண்டு நடத்திவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தனால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.

 

மாநகர முதல்வர் தெரிவையொட்டி மாநகர சபை வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

கொரோனா பரிசோதனை

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற மாநகர உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் தொற்றுக் கால சுகாதார நடைமுறைகளைப் போல பரிசோதனைக்கு உட்படுத்தியமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். மாநகர சபையில் வெற்றிடமாக உள்ள முதல்வர் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, முகக் கவசம் அணிவிக்கப்பட்ட பின்னரே உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கடுமையான நடைமுறை

நாட்டில் கொரோனாப் பெருந் தொற்று அபாயம் குறைவடைந்துள்ள நிலையில், சுகாதாரத் திணைக்களத்தினால் கட்டாயமாக்கப்பட்டிருந்த சுகாதார நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், யாழ். மாநகர சபையில் குறிப்பாக மாநகர சபைக் கூட்டத்தின் போது, சபை மண்டபத்தினுள் மட்டும் கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டமை உறுப்பினர்களிடையே ஐயத்தையும், விசனத்தையும் தோற்றுவித்துள்ளது.