‘இரட்டை இலை கிடைக்குமா?’

05.04.2025 08:25:52

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தடையானையை நீக்கி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது அந்த உத்தரவு தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி தடையானை நீக்கிய உயர்நீதிமன்ற உத்தரவினை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விரிவான விசாரணையைத் துவங்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக புதிய வழக்கு ஒன்றினை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து உள்ளார். அதில் தேர்தல் ஆணையம் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும். விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் நீதிமன்றம் கால வரையறை (time fixed) நிர்ணயித்து உத்தரவு வழங்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றினைத் தொடர்ந்து இருக்கிறார். மேலும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் வா புகழேந்தி உள்ளிட்டோருக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த வா. புகழேந்தி தெரிவித்துள்ளதாவது, “மீண்டும், மீண்டும் வழக்கு தொடர்ந்து கொண்டே இருப்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்பட்டிருக்கின்ற பயத்தைக் காட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் விரிவான விசாரணையை எதிர்கொள்ளத் தயங்குகிறார். இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்கின்ற பயம் தொடர்வதைத்தான் இது காட்டுகிறது. நீதிமன்ற ஆணையை ஏற்றுத் தேர்தல் ஆணையம் விசாரணையை விரைவில் துவங்கும். இவர் தொடர்ந்துள்ள வழக்குகளையும் எதிர்கொள்வோம்” எனக் கூறியுள்ளார். புகழேந்தி, சூரியமூர்த்தி தொடர்ந்த பிரதான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.