மகனை தொடர்ந்து மகளையும் நடிக்க வைத்த விஜய் சேதுபதி

31.12.2020 10:41:51

 சிந்துபாத் படத்தில் மகனை நடிக்க வைத்த விஜய் சேதுபதி, தற்போது தனது மகளையும் முகிழ் என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

 தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர சுமார் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மகன் சூர்யாவை சிந்துபாத் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி தானும் அப்படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. 

 இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் தற்போது அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி, ரெஜினா கசண்ட்ரா நடிப்பில் உருவாகி உள்ள முகிழ் என்ற படம் மூலம் ஸ்ரீஜா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லரை நாளை புத்தாண்டன்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.