'இல.கணேசன் மறைவு.

16.08.2025 09:27:59

பாஜகவின் மூத்த நிர்வாகியும், நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 8 ஆம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் இருந்தபோது இல.கணேசன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இல.கணேசன் தமிழக பாஜக தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல.கணேசன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'இல.கணேசன் மறைவு வருந்தத்தக்க செய்தி' என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'அனைவரிடமும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவர் இல.கணேசன். அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்' என தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், 'நாகாலாந்து ஆளுநர் மரியாதைக்குரிய இல.கணேசன் அவர்கள் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தேசப்பற்றாளரான அவர் சுதந்திர தின அன்று மறைந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. தேசப்பற்று தெய்வப்பற்று, தமிழ்பற்று மிகுந்தவர். அரசியலில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் பரிமளித்தவர். பாஜகவின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர். ஆர்.எஸ்.எஸி ல் தொண்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று ஆளுநராக தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்தவர். இன்று பாரதிய ஜனதா கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் உருவாக்கியவர். பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல இலக்கியவாதிகளுக்கு பக்க பலமாக இருந்தவர். அதில் அரசியலில் அவருக்கு நிர்வாகியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பிலும் அவரோடு நிர்வாகியாக பணியாற்றும் பாக்கியம் பெற்றவள் கட்சியில் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் வழி வகுத்தவர். அவர் இழப்பு மிகப்பெரிய இழப்பு அவரை இழந்து வாடும் அவர் உறவினர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநரும், நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அய்யா இல. கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும் கனிவான குணமும் கொண்டவர், தனது வாழ்நாளை தேசத்திற்காகவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார்.

மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநராக தனது சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்த அய்யா இல. கணேசன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நமது பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரசின் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் செம்மலை உள்ளிட்ட பலரும் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.