சினிமா படப்பிடிப்பில் விபரீதம் பெண் ஒளிப்பதிவாளர் பலி

23.10.2021 17:36:41

அமெரிக்காவில் ஹாலிவுட் படப்பிடிப்பின் போது, போலி துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் தவறுதலாக சுட்டதில், பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம், சான்டா பீ நகரில் ரஸ்ட் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நடிகர் அலெக் பால்ட்வின் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படப்பிடிப்பின் போது நடிகர் அலெக் பால்ட்வின், திரைப்படங்களில் பயன்படுத்தும் போலி துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில், எதிர்பாராத விதமாக, படத்தின் ஒளிப்பதிவாளரான ஹலினா ஹட்சின்ஸ், இயக்குனர் ஜோயல் சோசா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், கவலைக்கிடமான ஹலினா ஹட்சின்சை அவசர சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே மரணம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜோயல் சோசா நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். திரைப்படங்களில் பயன் படுத்தும் போலி துப்பாக்கிகளில் நிஜமான குண்டுகள் இருக்காது. ஆனால் குண்டு வடிவில் மெழுகுடன் இணைந்த வெடிமருந்து இருக்கும். துப்பாக்கி விசையை இழுத்தவுடன், வெடிமருந்து வெடித்து தீப்பொறியுடன் குண்டு பாய்ந்தது போன்ற பிரமை ஏற்படும்.