நாடாளுமன்றமே நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது.

08.11.2024 08:24:07

நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டும் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி மக்களிடம் வாக்கு கேட்கிறது. இவர்கள் வெளியிடும் கருத்துகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரான பாரிய தாக்குதலாகும். அவர்களிடமிருந்து நாடாளுமன்றத்தை காப்பாற்றுவதற்காக முன்வந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

   

பியகமவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

”நாடாளுமன்றம் நாட்டின் மிக உயர்ந்த அமைப்பு. நாட்டுக்கு தேவையான சட்டங்களை உருவாக்குவது நாடாளுமன்றம்தான். நாட்டை முன்னேற்றுவதற்குத் தேவையான சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது. நாட்டின் நிதியை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துகிறது. அத்தகைய ஒரு உயர்ந்த நிறுவனத்தை தேசிய மக்கள் சக்தி விமர்சிக்கிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது ஆபத்தாகும்.

நாடாளுமன்றத்தை திருடர்களின் குகை என்கிறார்கள். அவ்வாறு அது திருடர்களின் குகை என்றால் தேசிய மக்கள் சக்தியினர் ஏன் அங்கு வர முயற்சிக்கின்றனர். நாடாளுமன்றமே நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது. அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்தால் அது இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகக் கூட அமையலாம்.” என்றார்.