தனுஷ் இரட்டை விருதுகள் வென்று வரலாற்றுச் சாதனை.
மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் இயக்குநருமான தனுஷ் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
அவர் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதையும், அவரது நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சிறந்த நடிகருக்கான சிறப்புத் தகுதி விருதையும் பெற்றுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராயன்' மற்றும் 'கேப்டன் மில்லர்' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்காக ஒரே நேரத்தில் தேசிய விருதுகளைப் பெற்றிருப்பது தமக்கு மிகுந்த பணிவையும் பெருமகிழ்ச்சியையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது, ஆனால் ஒரு இயக்குநராக இது எனது முதல் தேசிய விருது" என்று தனுஷ் நெகிழ்ந்துள்ளார்.
தனது பலத்தின் தூண்களாக விளங்கும் இரசிகர்கள் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது என்று இதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இன்றுவரை தனது மிகச்சிறந்த நடிப்பு என்று அவரே நம்பிய 'கேப்டன் மில்லர்' கதாபாத்திரத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது, அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும், இந்த கௌரவம் அதற்கு மேலும் அர்த்தம் சேர்த்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், ராயன்' படத்தின் மூலம் இயக்குநராக வென்ற முதல் தேசிய விருது, தான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு வரம் எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய விருது நடுவர் குழுவிற்கும், தேர்வுக் குழுவிற்கும், ஆரம்பம் முதல் தனக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ள தனுஷ், தனது வழக்கமான தாரக மந்திரங்களான "எண்ணம் போல் வாழ்க்கை" மற்றும் "ஹர ஹர மகாதேவ்" என்ற வரிகளுடன் "அன்புடன் D" என அந்தப் பதிவை நிறைவு செய்துள்ளார்.