ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் நான்கு முதுநிலை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை!

04.03.2021 10:09:29

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக, ரஷ்யாவின் 4 முதுநிலை அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம், பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதன் மூலம், ரஷ்ய புலனாய்வுக் குழுவின் தலைவர் அலெக்ஸாண்டர் பாஸ்ட்ரிகின், அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்கள் குழு தலைவர் இகர் கிராஸ்னோவ், தேசிய பாதுகாப்புப் படை தலைவர் விக்டர் ஸோலோடோவ், மத்திய சிறைத் துறைத் தலைவர் அலெக்ஸாண்டர் கலஷ்னிகோவ் ஆகிய 4 அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷ்யாவை சேர்ந்த 7 முதுநிலை அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது.

எனினும், இந்த பொருளாதாரத் தடைகளை கண்டு தாம் அஞ்சப் போவதாக இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

விளாடிமீர் புடின் தலைமையிலான அரசாங்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் அலெக்ஸி நவால்னி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நச்சுத்தாக்குதலுக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜேர்மனி மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த அவர், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி ரஷ்யா திரும்பிய பிறகு அவரை பொலிஸார் கைது செய்தனர்.

மற்றொரு வழக்கு ஒன்றில் பரோல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் இந்த போராட்டங்களை புடின் அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை.

அத்துடன் அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் அலெக்ஸி நவால்னியை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தின. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.