ஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் !
ஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது.
குறிப்பாக கடந்த திங்கட்கிழமை அல்-அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனைபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியது.
இதற்கு இஸ்ரேலிய இராணுவத்தின் பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது.
காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயற்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.