
சோமரத்ன ராஜபக்சவின் கடிதம் - முக்கிய திருப்புமுனை!
செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள், இதனை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். |
யாழ் செம்மணி மனிதப்புதைகுழு விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் நடாத்தப்பட்டுவந்த சித்திரவதைக்கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், 'செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்போது உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இருக்கிறார். இருப்பினும் இந்த நாட்டுக்குள் உண்மைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதுவதனாலேயே அவர் சர்வதேச விசாரணையைக் கோருகிறார். இந்த சர்வதேச விசாரணையையே நாம் 2010 ஆம் ஆண்டிலிருந்து கோரிவருகிறோம். அவ்வாறிருக்கையில் தற்போது சிங்களத்தரப்பிலிருந்து, அதுவும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து அந்தக் கோரிக்கை வந்திருப்பதை நாம் எமக்கான ஒரு விடையாகவே பார்க்கிறோம். அதேபோன்று தனக்கு ஆணையிட்ட உயரதிகாரிகள், படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் உள்ளிட்ட சகலரது விபரங்களையும் வெளிப்படுத்துவதற்குத் தயார் எனவும் அவர் கூறியிருக்கிறார். எனவே நீதிக்கான பயணத்தில் சர்வதேசத்தின் தலையீடு அல்லது பங்களிப்பு இல்லாவிடின், அது உண்மையான நீதியாக இருக்காது என சிங்களவர்களே கூறுமளவுக்கு இன்று நிலைமை மாறியிருக்கிறது. எனவே இலங்கை அரசாங்கம் முதலில் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி மீண்டும் மீண்டும் உள்ளகப்பொறிமுறை எனக்கூறி சகல தரப்பினரையும் ஏமாற்றுவதை விடுத்து, நீதியானதொரு சர்வதேசப்பொறிமுறையை நோக்கி நகரவேண்டும். அப்பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரக்கூடியதாக இருக்கவேண்டும்' என வலியுறுத்தினார். அதேவேளை சோமரத்ன ராஜபக்ஷவின் கடிதம் தொடர்பில் கருத்துரைத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், 'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கு விசாரணைகளின்போதே செம்மணியில் சுமார் 300 - 600 பேர் வரை புதைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனை ஒரு முக்கிய விடயமாகக் கருதி அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக அவ்வேளையில் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் பலர் சிறை செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். 'இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படுமாயின் இதுபற்றிய உண்மைகளைக் கூறத்தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜக்ஷ தெரிவித்திருக்கிறார். எனவே இவ்விவகாரத்தை ஒரு சர்வதேச கட்டமைப்பின் முன்னிலையில் விசாரிப்பதன் ஊடாக மாத்திரமே சகல உண்மைகளையும் வெளிக்கொணரமுடியும். ஆனால் எவ்வேளையிலும் இராணுவத்தைப் பாதுகாப்பதற்கு முற்படும் இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைக்கான நகர்வுகளை ஒருபோதும் முன்னெடுக்காது. ஆகவே மிகச்சிறந்த இந்தத் திருப்பத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடியவகையில் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும்' எனக் குறிப்பிட்டார். மேலும் சோமரத்ன ராஜபக்ஷ சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாகத் தெரிவித்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இதுகுறித்து ஜனாதிபதி உரியவாறான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதுமாத்திரமன்றி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், இதுகுறித்து சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டும் எனவும், நியாயமான சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார். |