வர்த்தக சங்கம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

11.03.2024 07:00:00

புதுடெல்லி: இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதில் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் உறுதி அளித்துள்ளன.தகவல் தொழில்நுட்பம், ஆடியோ விஷூவல் மற்றும் திறமையான நிபுணர்களின் இயக்கம் போன்ற முக்கிய உள்நாட்டு சேவை துறைகளின் முதலீடுகள், ஏற்றுமதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இதன் பின்னர் ஒன்றிய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில்,‘‘‘முதல் முறையாக வளர்ச்சியடைந்த நாடுகள் அடங்கிய அமைப்புடன் தடையற்ற வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்(ரூ.8.3 லட்சம் கோடி) முதலீடுகளை செய்வதற்கு அந்த நாடுகள் உறுதி அளித்துள்ளன. ஒரு ஆண்டுக்கு பிறகு ஒப்பந்தம் அமலுக்கு வரும். இந்த சங்கத்தில் ஐஸ்லாந்து,லீக்டன்ஸ்டைன்,நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய 4 நாடுகள் உள்ளன’’ என்றார்.

இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் கடந்த 2008ல் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்படும் வரை செயலற்ற நிலையில் இருந்தது. பிரதமர் மோடி வௌியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்த சங்கம் இடையிலான ஒப்பந்தம் நமது வளர்ச்சிக்கான விருப்பங்களை பிரதிபலிக்கும் புதுமையான வர்த்தக ஒப்பந்தம் ஆகும். இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.