நான் தமிழரே இல்லையா?

15.07.2026 13:34:10

கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார்.

ஆரம்பக் காலத்தில் விசிக-வின் கருத்துகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை என்றும், ஒரு சிறு செய்தி வெளியானால் கூட அதைப் பாதுகாத்து வைத்த நிலை இருந்தது என்றும் அவர் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். 

ஆனால், இன்று திருமாவளவனின் ஒவ்வொரு அடியும், பேச்சும் ஊடக விவாதங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளது என்றும், இந்த அங்கீகாரம் இடைவிடாத போராட்டங்களின் மூலமே சாத்தியமானது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், தன் மீது பரப்பப்படும் சாதிய அவதூறுகளுக்கு அவர் மேடையில் கடுமையான பதிலடி கொடுத்தார். தான் தமிழனே இல்லை என்றும், தனது பெயர் திருமாவளவன் இல்லை என்றும் சிலர் பொய்ப் பிரசாரம் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், இறந்த தனது ஆசிரியரின் மாணவரான 'திருமாவளவன்' என்பவரின் சாதி அடையாளத்தை பாமக போன்ற கட்சியினர் தன் மீது திணிக்கப் பார்ப்பதாகச் சாடினார். 

சாதி ஒழிப்பையே லட்சியமாகக் கொண்ட தாங்கள், சமூக வலைத்தளங்களில் சாதிச் சான்றிதழைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், தங்களை 'ஆண்ட பரம்பரை' என்று கூறிக்கொள்ளும் கும்பல் அல்ல, மாறாக வள்ளுவர் மற்றும் புத்தரின் வழிவந்த 'அறிவுப் பரம்பரை' என்றும் அவர் முழங்கினார்.