மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு

07.01.2023 10:12:25

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சனிக்கிழமை (07) காலை நடைபெற்றது.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், உட்பட வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற , மாகாண சபை  உறுப்பினர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கட்சியின் இளைஞர் அணியினர்  உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக் கட்சியின் தலைவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

 

அதனை தொடர்ந்து மத்தியகுழு கூட்டம் ஆரம்பமாகியதுடன் இதில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டம் நடைபெறுகின்ற போது, மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.