இந்தோனேஷியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை!
நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை புதன்கிழமை 10 முறை வெடித்து, பாரிய சாம்பல் புகைகளை வான் நோக்கி வெளியிட்டது.
பாறையின் சரிவுகளில் 13 கிலோ மீற்றர் வரை எரிமலைக் குழம்புகள் வழிந்தோடியதைத் தொடர்ந்து எச்சரிக்கை நிலை மிக உயர்ந்த அளவில் பராமரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், கிழக்கு ஜாவாவின் மீட்பு நிறுவனம் வெளியேற்றத்திற்கு உதவ நூற்றுக் கணக்கான பணியாளர்களை அனுப்பியது.
எரிமலைக்கு அருகில் வசிக்கும் 956 பேர் ஏற்கனவே பாடசாலைகள், மசூதிகள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
3,676 மீற்றர் உயரமுள்ள செமெரு எரிமலை, இந்தோனேசியாவில் உள்ள சுமார் 130 செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றாகும்.
இது இறுதியாக 2021 டிசம்பர் மாதம் வெடித்தது, இதன்போது குறைந்தது 51 பேர் உயிரிழந்துடன், அருகிலுள்ள கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டிருந்தன.