சமபோசாவில் ஆபத்தான விசம்!

22.09.2022 09:00:00

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சமபோசா, யஹபோசா, லக்போசா ஆகிய மூன்றிலும் ஆபத்தான விசம் அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற அப்ளாடோக்சின் என்ற பொருட்கள் அதிகளவில் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை விற்பனை செய்யும் 3 முன்னணி நிறுவனங்களின் 6 இயக்குனர்களையும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அதிக அளவு அப்ளாடோக்சின்

அதற்கமைய, சிலோன் பிஸ்கட் நிறுவனம், பிளென்டி புட்ஸ் நிறுவனம், மலிபன் டெய்ரி அக்ரோ தனியார் நிறுவனம் மற்றும் மெலிபன் மில்க் ப்ரொடக்ட்ஸ் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் துணை நிறுவனங்களான மூன்று நிறுவனங்களும் இந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களால் விற்பனை செய்யப்படும் குறித்த பொருட்களில் உள்ளடங்க வேண்டிய அளவினை விடவும் அதிக அளவு அப்ளாடோக்சின் உள்ளடங்குவதாக கூறி கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

1990 - 20 ஆம் இலக்க உணவு (திருத்தம்) சட்டத்தின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அறிக்கை

சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பத்தரமுல்லையில் உள்ள அரச பகுப்பாய்வு அலுவலகத்தில் கொடுத்து அதன் அறிக்கையை சுகாதார பரிசோதகர்கள், பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த அறிக்கைக்கமைய, இவற்றில் அப்ளாடோக்சின் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொதுவாக உணவில் காணப்படும் அப்ளாடோக்சின் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இரசாயனமாகும்.

அந்த அறிக்கையின்படி, லக்போஷா என்ற தயாரிப்பில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை விட 26 மடங்கு அதிக அப்ளாடோக்சின் இருப்பதாக நீதிமன்றத்தில் தகவல் முன்வைக்கப்பட்டுள்ளன.