10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து!

20.08.2025 08:04:39

தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை மோதலைத் தொடர்ந்து கம்போடிய தொழிலாளர்கள் நாடு திரும்புவதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து, வயதான மக்கள் தொகை மற்றும் சுருங்கி வரும் பணியாளர்கள் எண்ணிக்கை என்பவற்றினால் விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 3 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்புக்காக இலங்கையில் இருந்து 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

மேலும், முதல் கட்டத்தில் 10,000 பேர் தாய்லாந்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர் பொங்காவின் ஜங்ருங்ருங்ராங்கிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினை, பல தசாப்தங்களில் மிக மோசமான சண்டையாக மாறியது.

 

எல்லையின் இருபுறமும் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.

இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இப்போது ஒரு பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

மோதல் தொடங்குவதற்கு முன்பு, 520,000 க்கும் மேற்பட்ட கம்போடியர்கள் தாய்லாந்தில் பணிபுரிந்தனர்.

இது நாட்டின் வெளிநாட்டுப் பணியாளர்களில் 12 சதவீதமாகும் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் பணிபுரியும் சுமார் 400,000 கம்போடியர்கள் மோதலின் போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், தொழிலாளர்களின் முக்கிய ஆதாரமாக உருவெடுத்துள்ள இலங்கை, 2024 ஆம் ஆண்டில் சாதனை அளவில் 314,786 குடிமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி பலரை வெளிநாடுகளுக்கு வேலை தேடத் தள்ளியுள்ளது.

 

மத்திய கிழக்கு நாடுகளே இலங்கையர்களின் முதன்மையான இடமாக அதில் உள்ளது.

மேலும் பலர் தென் கொரியா மற்றும் ஜப்பானிலும் வேலை புரிகின்றனர்.

தெற்காசிய தீவு நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிகப்பெரிய ஆதாரமாக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.