தனுஷ் படத் தலைப்புக்கு கிளம்பிய சிக்கல்

18.04.2024 07:20:00

நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.
 

 

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
 

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு குபேரா என்று டைட்டில் வைக்கக் கூடாது என்று பிரபல தயாரிப்பாளரான கர்மிகோண்டா நரேந்திரா என்பவர் வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே தலைப்பை தெலங்கானா திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அதனால் அந்த தலைப்பு தனக்கே சொந்தம் என்றும் கூறி அவர் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.