நவல்னியை விடுதலை செய்யக்கோரி ரஷ்யாவில் போராட்டம்

24.01.2021 10:29:27

 

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நவல்னியின் மனைவி உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டு வரும் அலெக்ஸி நவல்னி, ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் திகதி ரஷ்யாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மொஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஜேர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலெக்சிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜேர்மனி அரசு அண்மையில் உறுதிப்படுத்தியது.

இது தொடர்பாக ரஷ்ய அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அதனை ரஷ்யா மறுத்தது.

இதனையடுத்து, ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்த அவர், குணமடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் ரஷ்யா திரும்பியபோது  நவல்னியை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், நவல்னி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ரஷ்யாவின் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

மாஸ்கோ உள்ளிட்ட அந்நாட்டின் பல இடங்களில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு சில இடங்களில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், பொலிஸார்- போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதாக நவல்னியின் மனைவி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும்நவல்னியின் மனைவி மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நவல்னி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, பிரித்ததானியா, கனடா உள்ளிட்ட  நாடுகள் ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.