தள்ளிப் போன 'ஆர்ஆர்ஆர்', மாற்றத்தில் பொங்கல் ரிலீஸ்

02.01.2022 14:43:29

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரானோ பரவல் மீண்டும் அதிகமாகி வருவதால் சில மாநிலங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டதையடுத்து படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தார்கள்.

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு வழிவிட்டு தெலுங்கில் பல படங்களின் வெளியீட்டைத் தள்ளிவைத்தார்கள். இப்போது 'ஆர்ஆர்ஆர்' படம் வராத காரணத்தால் சில படங்களை பொங்கலுக்குக் கொண்டு வர தெலுங்குத் திரையுலகத்தில் முயற்சித்து வருகிறார்கள்.

தமிழில் 'வலிமை' படத்தை பொங்கலை முன்னிட்டு வெளியிடுவதாக அறிவித்துவிட்டார்கள். தற்போது 'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவராத காரணத்தல் அதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தியேட்டர்களுக்குப் புதிய படங்கள் தேவை. அவற்றில் சில தியேட்டர்களில் 'வலிமை' படத்தை திரையிடுவார்கள். மீதி தியேட்டர்களில் திரையிட சில புதிய படங்களை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அந்தப் படங்களைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 சதவீத இருக்கை என்பதால் சில படங்கள் மட்டுமே வெளியாகலாம்.