யாழ். அரியாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்
யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள், அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்., அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணிக்குள் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளுக்கு தீ மூட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளமையை அயலவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதனை அடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொறுப்பு கூறி, அவற்றை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஊடாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், பொலிஸார் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மூன்று மணி நேரம் கடந்தும் சம்பவ இடத்திற்கு வருகை தராத காரணத்தினாலேயே, மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். – கண்டி நெடுஞ்சாலையை மறித்து இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதனால், குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்தும் சிறிது நேரத்திற்கு பாதிக்கப்பட்டிருந்ததோடு, சர்ச்சையான சூழலும் ஏற்பட்டிருந்தது.
போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாண பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உதவி அத்தியட்சகர், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் சத்தியமூர்த்தியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து போராட்டக்காரர்களுடன் உரையாடியிருந்தார்.