சூடானில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு
சூடானில், ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவோர் மீது ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை, 41 ஆக அதிகரித்துள்ளது.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவம் கடந்த மாதம் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. பிரதமர் அப்தல்லா ஹம்டோக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது ராணுவத்தினரும், போலீசாரும் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில் படுகாயம் அடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சை, ராணுவம் வழி மறித்து சிகிச்சை பெறுவதை தடுப்பதாக, சூடான் டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக ராணுவமும், போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், போராட்டக்காரர்கள், 40 பேர் பலியாயினர்.
இந்நிலையில், ராணுவத்திற்கும், முன்னாள் பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கிற்கும் இடையே நேற்று முன்தினம் அதிகார பகிர்வு தொடர்பாக சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 16 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து, பலி எண்ணிக்கை, 41 ஆக அதிகரித்துள்ளது.
சூடானில் ஜனநாயக ஆட்சி கோரி போராடுவோர் மீது ராணுவமும், போலீசும் தாக்குதல் நடத்துவதை ஐ.நா., மனித உரிமை அமைப்பு கண்டித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் அமைதி வழியில் நடக்கும் போராட்டத்தை தடுக்க வேண்டாம் என, ராணுவத்தினருக்குகோரிக்கை விடுத்துள்ளன.