மலேசிய ராணுவ வலைத்தளங்களில் சைபர் தாக்குதல்

30.12.2020 13:44:44

மலேசிய ராணுவத்துக்கு சொந்தமான பல்வேறு வலைத்தளங்களில் ‘ஹேக்கர்கள்’ ஊடுருவி ரகசிய தகவல்களை திருட முயற்சித்ததாக மலேசிய பாதுகாப்பு படைகளின் தலைவர் அபெண்டி புவாங் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘மலேசிய ஆயுதப் படைக்கு சொந்தமான வலைத்தளங்களில் சைபர் தாக்குதல் நடந்ததை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எனினும் ராணுவத்தின் ரகசிய தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்கப்பட்டன’’ என்றார்.

மேலும் அவர் ‘‘ராணுவ சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளான சைபர் பாதுகாப்பு மற்றும் மின்காந்த பிரிவு, சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் ஆகியவை ராணுவத்தின் முக்கிய தரவுகளை மறைக்க மற்றும் ராணுவ வலைத்தளங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன’’ என கூறினார்.

 

ஹேக்கர்கள் பெரும்பாலும் மலேசிய ஆயுதப்படை மற்றும் ராணுவ அமைச்சகத்தின் வலைத்தளங்களை குறிவைப்பதாகவும் எனினும் சைபர் பாதுகாப்பு மற்றும் மின்காந்த பிரிவு, சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் ஆகியவை கோலாலம்பூரின் பாதுகாப்பு தகவல் தொடர்புகளை தொடர்ந்து பாதுகாத்து வருவதாகவும் அபெண்டி புவாங் தெரிவித்தார்.