
8 துறை சாதனையாளர்களுக்கு விருது- டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்
கண்ணியத் தலைவர் காமராஜரின் கதை’, ‘சரித்திரம் படைத்த சான்றோர்கள்’ ஆகிய 2 தலைப்பிலான புத்தகங்களை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். வளர்ச்சியின் நாயகன் காமராஜர். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்கிறார். காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி 8 துறை சாதனையாளர்களுக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர்-தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். விழாவில் 'பொறையார் ராவ்பகதூர் ரத்தினசாமி நாடார் விருது' (பத்திரிகை மற்றும் ஊடகத்துறை) 'தினத்தந்தி' குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.