தீவிரமாகும் மேகதாது விவகாரம்.

15.07.2026 13:28:03

மேகதாது அணையைக் கட்டுவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு முயன்று வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைக்கக் கூடாது என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  

அதேநேரம் தமிழக விவசாயிகள் கர்நாடகாவின் மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தை எதிர்த்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான ஓசூர் பகுதியில் கன்னட அமைப்புகள் தமிழகத்தின் நிலைப்பாட்டை எதிர்த்து இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அதேபோல் தமிழக எல்லையில் தமிழக விவசாய அமைப்புகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.

இதனால் அங்கு எந்தவிதமான பதற்றமான சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக ஓசூர் அருகே இரு மாநில எல்லையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லைப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.