மேலதிகமாக 700 மில்லியன்

07.07.2022 10:21:00

குறைவடைந்த எரிபொருளின் விலை

உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் வருகை தரவுள்ள எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக 700 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளமை எந்தளவிற்கு நியாயமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான பிரச்சினையாக தீவிரமடைந்துள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தை விரைவில் சரி செய்ய ஒழுங்கான விநியோக கட்டமைப்பு அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

115 டொலராக காணப்பட்ட ஒரு எரிபொருள் தாங்கியின் விலை தற்போது 99 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் 700 மில்லியன் ரூபாவை எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக செலுத்துவது எந்தளவிற்கு நியாயமானது என கேள்வியெழுப்பியுள்ளார்.

விநியோகத்தில் அடிப்படை சிக்கல்

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமை நாட்டின் பிரதான பிரச்சினையாக தீவிரமடைந்துள்ளது.

எரிவாயு விநியோக கட்டமைப்பு தொடர்பில் ஆராய லிட்ரோ நிறுவனத்தினர் நேற்று முன்தினம் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டார்கள்.

எரிவாயு விநியோகத்தில் பல அடிப்படை சிக்கல் காணப்படுவதை கோப் குழுவில் அறிய முடிந்தது.

எரிவாயு கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலை குறித்து கோப் குழு அதிக அவதானம் செலுத்தியுள்ளது. குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

நிலைபேறான தன்மையில் நாட்டின் கடன்

சர்வதேச நாணயத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரச கடன் மறுசீரமைக்கப்பட்டு,நாட்டின் கடன் நிலைபேறான தன்மையில் காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.