தமிழ்நாட்டுக்கு சிறப்பு பார்வையாளர் நியமனம்!
|
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பிரதாப் சிங் சிறப்பு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை செயலாளர் எம்எல் மீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‛‛தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சிறப்பு பார்வையாளராக முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மாநில தேர்தல் நிர்வாகம் சார்ந்த பணி மற்றும் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வார். அதோடு தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது. |
|
அந்த பணிகளையும் பிரதாப் சிங் மேற்பார்வை செய்தார். இந்த பணிகளுக்காக அவர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வார்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்பார்வை பணியின்போது எந்தவொரு தேர்தல் அதிகாரிக்கும் பாராட்டு கடிதங்களை வழங்க கூடாது என்று பிரதாப் சிங்கிற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது. இவரது நியமனம் குறித்த விவரங்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்காளர் பட்டியல் பிரிவு பொறுப்பு அலுவலர்கள் மற்றும் தமிழக தேர்தல் ஆணைய மண்ட பிரிவினருக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு இடமாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி சிவஞானம் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமைஇணை இயக்குநர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரிகள் அவருடன் சேர்ந்து செயல்பட உள்ளனர். இப்படி இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2021ம் ஆண்டை போலவே கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. |