நீட் தேர்வில் விலக்கு பெற பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் -டி.ஆர்.பாலு

18.07.2021 15:45:11

 

பொருளாதார வீழ்ச்சி, விவசாய பிரச்சனை உள்ளிட்ட 13 பிரச்சனைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 33 கட்சிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். கொரோனா குறித்து விரிவாக பேச மத்திய அரசு தயாராக இல்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘பொருளாதார வீழ்ச்சி, விவசாய பிரச்சனை உள்ளிட்ட 13 பிரச்சனைகள் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்கவும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது’ என்றும் டி.ஆர்.பாலு எம்பி கூறினார்.

ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பவுள்ளன.