பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான திட்டமொன்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சேவைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கை நிலைமைகளை பேணுவதற்காகவும் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் அரசாங்கம் உடனடியாக வழங்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை 25 மாவட்ட செயலகங்களின் கீழ் அமைந்துள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்களை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் நேற்று முதல் தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அதிப திலகரத்ன தெரிவித்துள்ளார்.
வெள்ள இடர்களைக் கையாள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய தேவையான வாகனங்கள், படகுகள் அல்லது ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றை வழங்குவதற்கும் அதன்படி, கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவம் என்பன அந்த பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேவையற்ற வகையில் வீதிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், வெள்ளம் அல்லது நீர்நிலைகள் உள்ள இடங்களில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.