பனிப்போர் ஏற்படும்: சீன அதிபர் எச்சரிக்கை

12.11.2021 12:48:49

'இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பதற்றமான சூழ்நிலை, மீண்டும் பனிப்போர் ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது' என, நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங் எச்சரித்துள்ளார்.
தென்சீன கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதிய ராணுவ ஒத்துழைப்பு கூட்டணியை அமைத்துள்ளன. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'அபெக்' எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நியூசிலாந்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள, 21 நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள் உள்ளன.அதனால், அடுத்தாண்டு கூட்டத்தை அமெரிக்காவில் நடத்துவது தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை.இந்தக் கூட்டத்தில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கின் பதிவு செய்யப்பட்ட உரை நேற்று ஒளிபரப்பப்பட்டது.

அதில், அவர் கூறியுள்ளதாவது:
இந்தோ - பசிபிக் கடல் பகுதியில், நாடுகள் அல்லது கொள்கைகளின் அடிப்படையில் எல்லைகளை வரையறுப்பது என்பது தோல்வியிலேயே முடியும். தற்போது இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது தொடர்ந்தால், மீண்டும் பனிப்போர் ஏற்பட்டு, நாடுகள் இடையே பிளவு ஏற்படும் அபாயம் உள்ளது.தற்போது நமக்குள்ள முக்கிய பணி, கொரோனா வைரஸ் பரவலை வெற்றி கொள்வது. அடுத்தது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது. அனைவரும் இணைந்து செயல்பட்டால், அது சாத்தியமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.