சிங்கம் நாளில் துவங்கிய மோகன்லால் - மம்முட்டி படங்கள்

19.08.2021 09:16:21

 

கேரளாவில் தற்போது மெதுவாக கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், புதிய படங்களுக்கான பூஜைகள் போடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் நடிக்கும் படங்களுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவின் பிரசித்த பெற்ற சிங்கம் நாளில் பூஜையுடன் துவங்கியுள்ளன.

இதில் மம்முட்டி, பார்வதி நடிக்கும் புழு என்கிற படத்தை அறிமுக பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் பூஜைக்கு மம்முட்டி மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கலந்துகொண்டார். அதேசமயம் படத்தின் நாயகியான பார்வதி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

அதேபோல மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் '12த் மேன்' என்கிற படத்தின் பூஜையும் நடைபெற்றது. ஆனால் தற்சமயம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ப்ரோ டாடி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதால் மோகன்லால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் உன்னி முகுந்தன், பிரியங்கா நாயர், ஷிவதா ஆகியோர் இந்த பூஜை நிகழ்வில் கலந்துகொண்டனர்.