வரிக் குறைப்பில் அரசாங்கம் சரியாக செயற்படவில்லை!

15.07.2025 08:14:44

அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சரியான முறையில் செயற்பட்டிருந்தால், அமெரிக்காவின் தீர்வை வரியை இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அதேநேரம் தற்போது 30 சதவீதத்துக்கு குறைத்துக்கொண்டிருப்பதன் மூலம் மகிழச்சியடைய முடியுமா என்பதை எமக்கு போட்டியாக இருக்கும் நாடுகளுடன் சந்தை நிலவரத்தின் பிரகாரமே தீர்மானிக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போதே தீ்ர்வை வரி அதிகரிப்பதாக டொனால் ட்ரம் தெரிவித்திருந்தார்.ட்லம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதுடன் அரசாங்கம் இதுதொடர்பில் கலந்துரையாடி இருக்க வேண்டும். எமது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் செயற்பட்டு வருவதால், நாங்கள் திட்டமிட்டு செயற்பட்டிருந்தால் சிறந்த நிவாரணம் ஒன்றை பெற்றுக்கொண்டிருக்கலாம்.

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னரே இந்தியா அது தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாட ஆரம்பித்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தன.

ஆனால் எமது அரசாங்கம் இறுதிக்கட்டத்திலே இது தொடர்பான கலந்துரையாடுவதற்கு சென்றார்கள். அதுவும் அதிகாரிகள் மட்டத்திலே இது இடம்பெற்றது. இதனைவிட உயர் மட்டத்தில் கலந்துரையாட முடிந்திருந்தால் எமக்கும் இன்னும் வரி நிவாரணத்தை குறைத்துக்கொண்டிருக்கலாம் என்றே நாங்கள் நினைக்கிறோம்.

அதேநேரம் அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் செயற்பட்டு, எமது நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் 20 சதவீத அளவுக்காவது எமக்கு குறைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தை பெரிதாக கண்டுகொள்ளாமல், இறுதி நேரத்திலே செயற்பட ஆரம்பித்தது.

வரி அதிகரிப்பு தொடர்பில் அமெரிக்காவின் அறிவிப்பு வந்ததுடன், உடனடியாக அரசாங்கத்தின் குழுவொன்றை அமெரிக்காவுக்கு அனுப்பி, கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

அதேநேரம் தற்போது 44 சதவீதமாக இருந்த இந்த வரியை 30 சதவீதமாக குறைத்துக்கொண்டிருப்பதாகவும் எம்முடன் அமெரிக்க சந்தையில் போட்டியிடக்கூடிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமக்கே குறைந்தளவு வரி விதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் பங்களாதேஷுக்கு எம்மைவிட 5 சதவீதமே வரி அதிகமாகும். ஆனால் அவர்களின் ஆடை உற்பத்தி செலவு எம்மைவிட குறைவாகும்.

அதனால் அவர்களுக்கு இதனை ஓரளவு சமாலிதுக்கொள்ள முடியுமாகும். அதேபோன்று வியட்நாமுக்கு20வீத அதிகரிப்பே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. இவ்வாறு இருக்கையில் அமெரிக்க சந்தையில் இந்த நாடுகளுடன் எமக்கு போட்டியிட முடியுமா என்றே நாங்கள் பார்க்க வேண்டும்.

அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்து எமது தீர்வை வரடியை 20சதவீதம் வரை குறைத்துக்கொள்ள முடியுமானாலே எமது தொழிற்சாலைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். அதேநேரம் இங்கிலாந்து தீர்வை வரி குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்தின் இந்த அறிவிப்பு முழு தெற்காசியாவுக்கும் வழங்கப்பட்டதாகும். அதனால் அரசாங்கம் இதுதொடர்பாகவும் கவனம்செலுத்த வேண்டும் என்றார்.