இரத்து செய்யப்படுமா நீட் தேர்வு?

11.06.2024 07:47:10

நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

நீட் தேர்வை இரத்து செய்யக்  கோரி கடந்த 7 ஆம் திகதி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் காணப்படுவதாகவும், நீட் தேர்வை இரத்து செய்து  புதிய அட்டவனையின் படி மீண்டும் தேர்வு நடத்த, தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனவும்  கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில்  குறித்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் ”மருத்துவ கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளதால், இந்த விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும்” குறிப்பிடப்பட்டுள்ளது.