SIR மூலம்தான் தவெக வென்றது?
|
தமிழ்நாட்டில் தவெகவின் வெற்றிக்கு SIRதான் காரணம் என்ற அச்சம், கேள்வி எழுந்துள்ளது.இது தொடர்பாக 'பிசினஸ்லைன்'வெளியிட்டுள்ள புள்ளிவிவர ஆய்வு, பல சுவாரசியமான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், தேர்தல் தொடர்பாக ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி' (Special Intensive Revision - SIR) மூலம் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதே தங்களின் தோல்விக்கு முக்கிய காரணம் என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். |
|
இந்த வாக்காளர் நீக்கங்கள் தவெக-வின் வெற்றிக்கு மறைமுகமாக கைகொடுத்ததா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பாக 'பிசினஸ்லைன்'வெளியிட்டுள்ள புள்ளிவிவர ஆய்வு, பல சுவாரசியமான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. வாக்காளர் நீக்கம் அதிகம் உள்ள இடங்களில் தவெக ஆதிக்கம்: புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? 2026 ஏப்ரல் மாத இறுதி வாக்காளர் பட்டியலையும், திருத்தப் பணிக்கு முந்தைய வாக்காளர் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு 234 தொகுதிகளின் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில், வாக்காளர் நீக்கம் குறைவாக இருந்த தொகுதிகளில் தவெக கடும் போட்டியை சந்தித்ததும், நீக்கம் மிக அதிகமாக இருந்த தொகுதிகளில் அக்கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதும் தெரியவந்துள்ளது. 10,000-க்கும் குறைவான நீக்கம் உள்ள தொகுதிகள்: மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே 10,000-க்கும் குறைவான வாக்குகள் நீக்கப்பட்டன. இவற்றில் தவெக 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. திமுக 7 தொகுதிகளையும், அதிமுக 6 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 4 தொகுதிகளையும் கைப்பற்றின. 10,000 முதல் 20,000 வரை நீக்கம் உள்ள தொகுதிகள்: இத்தகைய 80 தொகுதிகளில் தேர்தல் களம் சமபலத்துடன் இருந்தது. அதிமுக 24 தொகுதிகளிலும், தவெக 22 தொகுதிகளிலும், திமுக 20 தொகுதிகளிலும், மற்றவர்கள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 20,000 முதல் 30,000 வரை நீக்கம் உள்ள தொகுதிகள்: இந்த வரம்பில் இருந்த 66 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றது. தவெக 32 தொகுதிகளிலும், திமுக 21 தொகுதிகளிலும், அதிமுக 11 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வென்றன. 30,000 முதல் 50,000 வரை நீக்கம் உள்ள தொகுதிகள்: பெயர் நீக்கம் அதிகரித்த போது தவெக-வின் வெற்றியும் கூடியது. 37 தொகுதிகளில் தவெக 24 இடங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது. திமுக 8 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 50,000 முதல் 80,000 வரை நீக்கம் உள்ள தொகுதிகள்: இத்தகைய 22 தொகுதிகளில் தவெக 18 இடங்களை அள்ளியது. திமுக 3 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் மட்டுமே வென்றன. 80,000-க்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகள்: மிக உச்சகட்டமாக 80,000-க்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக-வே 100% வெற்றி பெற்றது. மேலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகளில் சராசரியாக 27,000 வாக்காளர் பெயர்களும், திமுக வென்ற தொகுதிகளில் சராசரியாக 31,000 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. திமுக முன்வைக்கும் சதி குற்றச்சாட்டு இந்த விவகாரம் குறித்து திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் காரசாரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேர்தல் களத்தில் இருந்து திமுகவை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், திமுக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இந்த முறைகேட்டை நடத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதே சமயம் வாக்காளர் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வாக்காளர்களை மட்டும் குறிவைத்து நீக்க முடியாது. இதற்கு எந்த அறிவியல் பூர்வமான அடிப்படையும் இல்லை. மேலும், வாக்குச்சாவடி அளவில் இரண்டு பெரிய கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளும் களத்தில் இருந்தனர். அப்போது அவர்கள் எந்தப் புகாரையும் பதிவு செய்யவில்லை. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இது தொடர்பாக அடுத்தடுத்துப் புகார்கள் எழுந்தன; ஆனால் தமிழ்நாட்டில் களத்தில் இருந்து எந்தப் புகாரும் வரவில்லை." மொத்தத்தில், வாக்காளர் பெயர் நீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் ஒருபுறம் விவாதத்தைக் கிளப்பினாலும், இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளையும் தாண்டி புதிய மாற்றத்தை விரும்பிய மக்களின் தீர்ப்பே இந்த தேர்தல் முடிவை தீர்மானித்துள்ளது என்றும் சிலர் கருதுகின்றனர். எது உண்மை என்பது SIR தொடர்பான வழக்குகளின் முடிவிலேயே தெரியும்! |