ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்

29.10.2022 15:28:19

சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனை குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் மோடி-20 கனவு திட்டம் புத்தகத்தை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, கல்லூரி செயலாளர் சீனிவாசன், முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேசியதாவது:- பிரதமர் மோடி 20 ஆண்டுகள் அரசியலில் பெரும் சாதனைகள் புரிந்து உள்ளார். குஜராத்தில் முதல் மந்திரி ஆகவும், நாட்டில் பிரதமராக இரண்டு முறையும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். அவரது சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவ- மாணவிகள் பிரதமர் மோடியின் சாதனை குறித்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் நாட்டு மக்களுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்குவதற்காக பாடுபட்டு வருகிறார். அவரது திட்டங்கள் மூலம் நாட்டில் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்து உள்ளன. உலக அரங்கில் இந்தியா வல்லரசு நாடாக மாறி வருகிறது. மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்காக புதுப்புது திட்டங்களை உருவாக்க அரசுக்கு உறுதுணையாக பாடுபட வேண்டும். அதன் மூலம் நாடு மேலும் வளர்ச்சி அடையும். கல்வி கற்பதன் நோக்கம் ஆராய்ச்சி குறிக்கோளாக இருக்க வேண்டும். பணம்-பொருள் ஈட்டுவது மட்டும் குறிக்கோளாக கூடாது. ஒவ்வொருவரும் தேசத்துக்காக பல்வேறு நவீன யுக்திகளை வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் இளைய சமுதாய மாணவ- மாணவிகள் ஈடுபட வேண்டும்.