
பட்டலந்த குற்றவாளிகளுடன் அரசாங்கம் டீல்!
பட்டலந்த தொடர்பில் தேடும் போது நாடு பூராகவும் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாகவும் அரசாங்கம் தேட வேண்டும். அதனால் சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு அரசாங்கம் தண்டனை வழங்கும் என்பது சந்தேகமாகும். அந்தளவுக்கு அவர்களுக்குள் டீல் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். |
பட்டலந்த தொடர்பில் தேடும் போது நாடு பூராகவும் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாகவும் அரசாங்கம் தேட வேண்டும். அதனால் சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு அரசாங்கம் தண்டனை வழங்கும் என்பது சந்தேகமாகும். அந்தளவுக்கு அவர்களுக்குள் டீல் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் 6 மாதங்கள் ஆகின்றன. தேர்தல் மேடைகளிலும் அதற்கு முன்னர் உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கன வரிகளை முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே இல்லாமல் செய்வோம் என்று கூறியிருந்தார். ஆனால் இதனை இன்னும் செய்யவில்லை. அவருக்கு வாக்களித்த பெண்கள் யூடியுப், டிக்டொக் பார்த்து 76 வருடங்களாக ஊழல் மோசடிகளாலேயே வரிகள் அதிகரித்துள்ளன. அந்த ஊழல்கள் குறைந்தால் வரி குறையும், வரி குறைந்தால் பொருட்களின் விலை குறையும் என்று கூறிக்கொண்டு தமது கணவர் கூறுவதையும் கண்டுகொள்ளாது அநுரகுமாரவுக்கு வாக்களித்தனர். ஆனால் 6 மாதங்கள் ஆகியும் இன்னும் பொருட்களின் விலைகளும் குறையவில்லை. வருமானமும் அதிகரிக்கவில்லை. இப்போது அந்த பெண்களுக்கு தமது கணவர்களுக்கு முகம்கொடுக்க முடியுமோ தெரியவில்லை. இதனால் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம். அத்துடன் நீங்கள் பட்டலந்த தொடர்பில் தேடும் போது நாடு பூராகவும் பிரேம கீர்த்தி, ஸ்டேன்லி விஜேசுந்தர, விஜேகுமாரதுங்க, கொட்டிகாவத்த சத்தாதிஸ்ஸ தேரர் கொல்லப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், இராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கொல்லப்பட்டமை தொடர்பிலும் தேட வேண்டும். பட்டலந்த வதைக்காரருக்கு தண்டனை கொடுக்கும் நடவடிக்கையுடன் இவை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வாறாயினும் பட்டலந்த சித்திரவதை புரிந்தவருக்கு தண்டனை வழங்கப்படுமா என்பதில் சந்தேகமே. ஏனெனில் சிறந்த டீல் ஒன்று உள்ளது. 1998 இல் ஆணைக்குழு அறிக்கை வந்தது. அதன்பின்னர் 2004இல் சந்திரிகாவுடன் இணைந்து அரசாங்கம் அமைத்தனர். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் 2005இல் உடன்படிக்கை செய்தனர். அப்போதும் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த போதும், 2015இல் நல்லாட்சி அரசாங்கத்தின் போது திருட்டுத்தனமாகவேனும் அதுபற்றி கூறவில்லை. 25 வருடங்களாக இருட்டு அறையில் இருந்த அறிக்கையை வெளியில் எடுப்பதற்கு அல்ஜசீராவில் தகவல் வெளியான பின்னரே இப்போது அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இனியாவது 1988/89இல் நடந்த சகல கொலைகள் தொடர்பிலும் மீள முழுமையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். |