தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட்

09.10.2022 10:23:03

ராஞ்சியில் இன்று நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களம் காணுகிறது.
இந்தியா வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும். நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்கும் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வியூகத்துடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

முந்தைய ஆட்டத்தில் 250 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 240 ரன்னுக்குள் அடங்கியது. பேட்டிங்கில் தொடக்க வரிசை வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான், சும்பான் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகியோர் சோபிக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் (50 ரன்கள்), சஞ்சு சாம்சன் (ஆட்டம் இழக்காமல் 86 ரன்கள்) மட்டுமே நிலைத்து நின்று ஆடினர். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தினார்

. வேகப்பந்து வீச்சாளர்கள் அவேஷ் கான், முகமது சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தாததுடன் ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அணியின் பீல்டிங்கும் மெச்சத்தகுந்ததாக இல்லை.