நரேந்திர மோடிக்கு சபையில் வாழ்த்து
இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
பாராளுமன்றம் புதன்கிழமை (05) கூடிய போது, விசேட அறிவித்தலை வெளியிட்டு பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இந்திய பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதன்போது பிரதமர் தினேஸ் குணவர்தன கூறுகையில்,
எமது அண்டை மற்றும் நட்பு நாடான இந்தியாவின் ஜனநாயக தேர்தலில் மூன்றாவது முறையாகவும் பிரதமராகும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான நரேந்திர மோடிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். பாராளுமன்ற ஜனநாயக முறையில் பெரும் சனத்தொகையை கொண்ட நாடாக இந்தியா இருக்கின்றது. அந்த நாட்டின் பிரதமராக மோடி செயற்படுகின்றார். ஆசியா நாடுகளுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்புடனும் இலங்கையுடனான ஒத்துழைப்புகளுக்கும் மோடி அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில்,
அடுத்தடுத்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும், மீண்டும் ஆட்சியமைக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் வாழ்த்துகளை கூறிக்கொள்கின்றோம். தொடர்ச்சியாக மக்கள் நம்பிக்கைகளை வென்று தொடர்ந்தும் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றோம். இலங்கை இந்தியா இடையே நெருக்கமான நட்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.